கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செய்து வருகின்றனர். கடந்த வருடம் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது நான்காவது நாளாக சேலத்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் அஞ்சலி செலுத்தி, மொட்டை அடித்தார்.
அப்போது அவர் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது, ''சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடியில் உள்ள கலைஞர் காலனியில் வகிக்கிறேன். என்னுடைய பெயர் கே.சத்தியமூர்த்தி. எனக்கு வயது 61 ஆகிறது. 18 வயதில் இருந்து திமுகவில் இருக்கிறேன். நான் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவர் எங்கள் சமுதாயத்திற்கு நிறைய செய்துள்ளார். அவரால்தான் எங்கள் சமுதாயம் முன்னேறியது. 74லேயே எங்கள் ஊரில் 101 கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறார். 101 குடும்பம் பயன்பெற்றுள்ளது.
எனது நான்கு பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது இரண்டு மகள்கள் ஆசிரியையாக உள்ளதற்கும், மற்றொரு மகள் டிஎன்பிஎஸ்சி 4 எழுதி வேலையில் இருப்பதற்கும், எனது மகன் வேலையில் இருப்பதற்கும் கலைஞர்தான் காரணம். அவர் எங்கள் சமுதாயத்தற்கு அளித்த இடஒதுக்கீட்டில்தான் எங்கள் குடும்பத்தின் வாரிசுகள் இன்று வேலையில் உள்ளார்கள்.
நான் இப்போது செருப்பு தைப்பதில்லை. சாலையோரம் கடை போட்டு செருப்புகளை விற்றுக்கொண்டிருக்கிறேன். கடந்த 7ஆம் தேதியே சென்னை வந்துவிட்டேன். ராஜாஜி அரங்கத்தில் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். ஆடி அமாவாசைக்கு என் தகப்பனாருக்கு மொட்டை போடுவது போல், இன்று என் தலைவர், என் குடிசாமி, என் குலசாமி கலைஞருக்காக மொட்டை அடித்துள்ளேன். எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அவர்தான்'' என கண்ணீர் சிந்தினார்.