நாகை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தை கட்சி வேட்பாளரை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாகை சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் நாகை மாவட்டம் சம்பாதோட்டம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய நாங்கள் உழைக்க தயார், அதனால் உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “நாகை தொகுதியை இந்தமுறை திமுகவிற்கு ஒதுக்கப்படும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கலாம் என்கிற ஆர்வத்தில் இருந்தோம், ஆனால் திமுக தலைமையோ கூட்டணி கட்சியான வி.சி.கவிற்கு தொகுதியை ஒதுக்கிவிட்டது. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆதரித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிபெற வைக்கிறோம். ஆனால் விசிக வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் உதயசூரியன் சின்னத்தை உதிக்கச் செய்ய வேண்டும்” என்கிறார்கள்.