கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்த பிறகு பாஜகவும் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை பாஜக களமிறக்கியுள்ளது. இதனை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில், பாஜக காங்கிரஸுக்கு பதிலும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தலே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “எனது சொந்த கிராமம் வருணா சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருவதால் நான் அத்தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுவே எனது கடைசி தேர்தலாகும். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சித்தராமையா கூறுவது இது முதல்முறையல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 2013ல் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் சித்தராமையா அறிவித்தார். ஆனால். 2018 சட்டமன்றத் தேர்தலின் போது, அவர் பாதாமி மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போதும், மீண்டும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது 2023 மாநிலத் தேர்தலில் எந்த இடத்திலும் போட்டியிடப் போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது வருணா மற்றும் கோலார் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | I am contesting from Varuna assembly constituency as my native village comes under this constituency. This is going to be my last election. I will retire from electoral politics: Karnataka Leader of Opposition and Congress leader Siddaramaiah
— ANI (@ANI) April 7, 2023
#KarnatakaElections2023 pic.twitter.com/Aj9ljRXbd8