தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம்,சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனால் திமுக,அதிமுக காட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதில் அரவக்குறிச்சி தொகுதி திமுக கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும், அதிமுக இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அரவக்குறிச்சியை பொறுத்தவரை அதிமுக, திமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் பலமான வேட்பாளர்களை களம் காண இறங்கியுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் நேரடி போட்டியாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிக்கு தான் என்றும் கூறி வருகின்றனர். தேர்தல் பணிகளை பொறுத்தவரை அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.இவர்களுடைய முக்கிய பணியாக வேட்பாளருக்காக களப் பணியில் ஈடுபடுவது, மாற்றுக் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தால் அதை தடுப்பது, வீதி,வீதியாக சென்று மக்களை சந்திப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவை பொறுத்தவரை தேர்தல் பணிகளை தேர்தல் தேதி அறிவித்த உடனே ஆரம்பித்து விட்டார்கள்.செந்தில் பாலாஜிக்கு உள்ளூரில் பெரிய அளவு ஆதரவு இருந்தாலும்,மேலும் வலுபடுத்துவதற்காக வெளியூரில் இருந்தும் நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளது திமுக.இதனால் செந்தில் பாலாஜியின் வெற்றியை உறுதி படுத்தும் நிலையில் அரவக்குறிச்சி தொகுதி உள்ளதாக அந்த தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியும் தீவிர களப்பணியில் இந்த இடைத்தேர்தலில் இறங்கியுள்ளனர். செந்தில் பாலாஜி பக்கமே வெற்றி இருப்பதாக உளவுத்துறை தரப்பில் தகவல் சென்றுள்ளதாம் ஆளும் கட்சிக்கு. இதனால் எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்பும் திமுக வெற்றியை தடுக்க தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள செந்தில்நாதன் போன 2011ல் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர். அப்போது முதல் இப்போதுவரை மக்கள் செல்வாக்கு மிக குறைந்தே உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிதான் வெற்றி பெறுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அதிமுக தரப்புக்கும் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் கடும் அதிருப்தியில் ஆளும் தரப்பு உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.