Skip to main content

2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!

Published on 22/04/2025 | Edited on 22/04/2025

 

Governor RN Ravi approves 2 bills

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்  கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. மேலும் அந்த தீர்ப்பில், “ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யலாம்.

மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனுத் தாக்கல் செய்ய முடியும். இந்த தீர்ப்பை அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும், ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனியார் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா (உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்டது), தமிழ்நாடு பொது கட்டட உரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கும் (பொதுப் பணித்துறை சம்பந்தப்பட்டது) ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஆணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்