
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110இன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர். 1929 ஆம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான்.
அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா. கலைஞர், எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990ஆம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார். இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர், அவரை எந்தாளும் தமிழினம் வணங்கிப் போற்றும். பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும்; எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம். இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.