Skip to main content

“யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்?” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் சரமாரி கேள்வி!

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

Who is this drama meant to deceive CM mk stalin barrage of questions to EPS

தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டப்பேரவையில் இன்று (21.04.2025) கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “எதிர்கட்சித் தலைவர், நீட் தேர்வு முறையை யார் கொண்டு வந்தது? யார் கொண்டு வந்தது? கொண்டு வந்த காரணத்தினால் தான் இவ்வளவு சிக்கல் என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிக்கலை சரிசெய்வதற்கு ஒரு சரியான வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ நான் அந்த வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை; அந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை.

“இப்போது இருக்கக்கூடிய நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்” என்று சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? இதுதான் என் கேள்வி. ஒன்றிய அரசு அதைக் கொண்டு வருவதற்கு எல்லாவித அதிகாரமும் இருக்கிறது. அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசிற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அது தேவையில்லை என்று வலியுறுத்துவதற்கு நீங்கள் தயாரா?. அதுதான் என்னுடைய கேள்வி.

வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு நாங்கள் எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றியத்தில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையைப் போட்டு, அந்தக் கூட்டணியை தொடர்வீர்களா? என்பதுதான் என் கேள்வி. நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு “பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். 2026 மட்டுமல்ல 2031லும் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று நீங்கள் கூறிவிட்டு, இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே; யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்” எனக் கேள்வி எழுப்பினார். 

சார்ந்த செய்திகள்