
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்து உணவு மற்றும் மருத்துவ பொருட்களை விற்று வருகிறது.
உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் ராம்தேவ்க்கு கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம், பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொய் விளம்பரங்களைப் பரப்புவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், போட்டி நிறுவனம் சர்பத் ஜிஹாத்தில் ஈடுபடுவதாக பாபா ராம்தேவ் பேசிய வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பதஞ்சலியின் ரோஜா சர்பத் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வெளியீட்டு விழாவின் போது விளம்பரத்தில் பேசிய பாபா ராம்தேவ், “உங்களுக்கு சர்பத் வழங்கும் ஒரு நிறுவனம் உள்ளது. ஆனால் அந்த நிறுவனம், சர்பத் மூலம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து மதராஸக்கள் மற்றும் மசூதிகளைக் கட்டப் பயன்படுத்துகிறது. நீங்கள் அந்த சர்பத்தை குடித்தால், மதராஸக்கள் மற்றும் மசூதிகள் கட்டப்படும். ஆனால், இந்த ரோஜா சர்பத்தை குடித்தால் குருகுலங்கள் கட்டப்படும், ஆச்சார்ய குலங்கள் உருவாக்கப்படும், பதஞ்சலி பல்கலைக்கழகம் விரிவடையும் மற்றும் பாரதிய சிஷா வாரியம் வளரும். லவ் ஜிஹாத் இருப்பது போல், இதுவும் ஒரு வகையான சர்பத் ஜிஹாத் தான். இந்த சர்பத், ஜிஹாத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இந்த செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும்” என்று பேசியிருந்தார். அவர் விமர்சித்த நிறுவனம், போட்டி நிறுவனமான ஹம்தார்ட்நிறுவனத்தை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அந்த நிறுவனத்தை தான் விமர்சித்துள்ளார் என்று புரிந்து கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு எதிராக ஹம்தார்ட் நிறுவனத் தலைவர் ரூஹ் அஃப்சா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்திற்கு வந்த போது, ஹம்தார்ட் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்தப் பிரச்சினை இழிவுபடுத்தலுக்கு அப்பாற்பட்டது என்றும், வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கில் வெறுப்புப் பேச்சுக்கு ஒப்பானது என்றும் வாதிட்டார். மேலும், இது அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வாதங்களை கேட்ட நீதிமன்றம், ‘பாபா ராம்தேவின் நியாயப்படுத்த முடியாத கருத்துக்கள் நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. வீடியோவைப் பார்த்தபோது எங்கள் காதுகளையும் கண்களையும் எங்களால் நம்ப முடியவில்லை. இது ஏற்க முடியாதது. எனவே அதை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று கூறியது.
அதன் பிறகு, பதஞ்சலி குழுமம் கேள்விக்குரிய அனைத்து வீடியோக்களையும் நீக்கும் என்று பாபா ராம்தேவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த உத்தரவாதத்தைக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், ‘ எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு அறிக்கைகள் அல்லது விளம்பரங்கள் அல்லது சமூக ஊடகப்பதிவுகளை அவர் வெளியிட மாட்டார் என்று கூறி ஒரு பிரமாணப் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை மே 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.