திருச்சி முன்னாள் மா.செ. கே.என்.நேருவின் மேற்கு தொகுதியில் பகுதிச் செயலாளராக இருப்பவர் காஜாமலை விஜய். இந்தத் தொகுதியில் அரசுத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்வதும் இவர்தான்.
ஒப்பந்தப் பணிகளுக்கு ஏரியா எம்.எல்.ஏ. முதல் அதிகாரிகள் வரை காண்ட்ராக்டர்கள் கமிஷன் கொடுப்பது வழக்கம். ஆனால், கே.என்.நேரு இதுபோன்ற கமிஷன்களை எதிர்பார்ப்பதில்லை. இதை சாக்காக வைத்து அதிகாரிகளுக்கும், காண்ட்ராக்ட் ஒப்பந்த சங்கத்திற்கும், ஒப்பந்தப் பணிகளுக்கான கமிஷனைக் கொடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் காஜாமலை விஜய். இது கே.என்.நேருவின் காதுவரை சென்றது.
இதற்கிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. பிரதிநிதிகளை பாராட்டும் விதமாக, பிரம்மாண்ட மாநாடு ஜனவரி 31-ந் தேதி கே.என்.நேருவின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. வழக்கமாக கே.என்.நேரு ஒருங்கிணைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், சில வருடங்களுக்கு முன்புவரை காஜாமலை விஜய்யின் ஏற்பாடுகளும் இருக்கும். ஆனால், கமிஷன் விவகாரம் கவனத்துக்கு வந்தபிறகு அவரைத் தவிர்த்தே வந்திருக்கிறார் நேரு.
இந்நிலையில், மாநாட்டிற்கு சிலதினங்களுக்கு முன்பு, கே.என்.நேருவைச் சந்தித்த காஜாமலை, ஒரு பையில் ஓரிரு லகரங்களைக் கொடுத்திருக்கிறார். “மாநாட்டு வேலைதான் எனக்குக் கொடுக்கலை. இந்தப் பணத்தையாவது வாங்கிக்கோங்கண்ணே'' என்று காஜாமலை சொல்ல, “வேலை பார்த்த எல்லாருக்கும் நான் பணம் கொடுத்துட்டு இருக்கேன். நீ எனக்கு பணம் தர்றியா. இதை வாங்க முடியாது. எடுத்துட்டு போப்பா'' என்று கே.என்.நேரு தவிர்த்துவிட்டார்.
உடனே, சின்னப்பிள்ளை போல கண்ணீர்விட்டு அழுத காஜாமலை, நேருவின் கையில் பணப்பையைத் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். நேருவோ, ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமாரை வரச்சொல்லி, அந்தப் பணத்தை காஜாமலை விஜய் மனைவியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பிவைத்தார்.
-ஜெ.தாவீதுராஜ்.