
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி இருந்தது பேசுபொருளாக மாறியது.
நாடாளுமன்ற (2024) தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் (2026) பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''முரசொலி மாறன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு ஒரு வருட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது இலாகா இல்லாத மாதிரியாக வைத்திருந்தார்கள். அப்பொழுது எல்லாம் பாஜக இவர்களுக்கு (திமுகவிற்கு) நல்ல கட்சியாக தென்பட்டது. இப்பொழுது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஏன் வைக்கிறீர்கள் என கேட்கிறார் முதலமைச்சர். எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாக இருந்தால் பாராட்டுவார்கள். பாதகமாக இருந்தால் எங்கள் மீது பழி சுமத்துவார்கள். இதுதான் அவர்களது வாடிக்கை. அண்ணா அறிவாலயத்தில் மேல் தளத்தில் ரெய்டு நடந்து கொண்டிருந்தது. கீழ்த் தளத்தில் கூட்டணி அமைத்துக் கொண்டு இருந்தார்கள். எனவே டீலிங் செய்வதெல்லாம் அவர்களுக்குதான் பொருந்தும்'' என்றார்.