மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்தார். இன்று (01/04/2022) டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கூட்டாட்சி, கல்வி உரிமை, ஜனநாயகத்தைக் காக்க நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணையவேண்டும். தேசிய அரசியலைப் பொறுத்தவரை திமுக எப்போதுமே தவிர்க்க முடியாத ஒரு கட்சி. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும். பாஜக அல்லாத கட்சியுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டும். பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர கட்சியில் உள்ள தனிநபர்களின் விமர்சனம் செய்வதில்லை. அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை காக்க 'ஒற்றுமையே வலிமை' என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.