சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டணி விவகாரம் குறித்தும், அதிமுகவுடனும் திமுகவுடனும் ஒரே நேரத்தில் பேரம் பேசியதை அம்பலத்திய துரைமுருகன் குறித்த கேள்விகளுக்கு தொடக்கம் முதலே ஆத்திரத்துடன் திமுக தலைவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய நிருபர்களையும் ஒருமையில் பேசினார். கேள்வி கேட்ட நிருபர்களையே ’நீ எந்த தொலைக்காட்சி’ என்று எதிர்கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் பிரேமலதா. முகம் தெரிந்த நிருபர்களை பெயர் சொல்லி நீ, வா, போ, என்றே பேசி அதட்டி, மிரட்டினார்.
ஒரு தொலைக்காட்சி நிருபரை பார்த்து, ’’இழுபறின்னு நேத்து நீதான சொன்ன... உனக்குத்தான் முதல் பதில்...எந்த இழுபறியும் இல்ல. எந்த குழப்பமும் இல்ல’’என்று பிரேமலதா சொன்னதும் சலசலப்பு உண்டானது. அப்போதும், இரு செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது, ’’நீ கேட்டுட்ட...நீ சொல்லு..’’என்று ஒரு நிருபரை அதட்டி, இன்னொருவரை கேள்வி கேட்கச்சொன்னார். அந்த நிருபர், துரைமுருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பியதுமே, ஆத்திரத்துடன் பிரேமலதா, ‘’ உனக்கு காரணம் தெரியலன்னா நீ அங்க(துரைமுருகன்) போய் கேளு. எங்கள பற்றி தெரியனும்னா இங்க கேளு’’ என்று வெடித்தார்.
அப்போது தேமுதிகவுக்கு கொள்கை கிடையாதா?ன்னு கேள்வி எழுப்பிய நிருபரை பார்த்து, ’’இரு..இரு... கொள்கை கிடையாதுனு உனக்கு யார் சொன்னா? எங்க கொள்கை என்னன்னு உனக்கு தெரியுமா? ’என்று ஆத்திரத்தை அடக்க முடியாத நிலைக்கு சென்றார் பிரேமலதா.
‘’நீங்க 24 மணி நேரமும் கேட்டுக்கு வெளியே நின்னுக்கிட்டே இருப்பீங்க. அதுக்காக நாங்க உடனே சொல்லிடனுமா. இவ்வளவு நாள் வெயிட் பண்னேல்ல...இன்னும் இரண்டு நாள் வெயிட் பண்ணு’’என்று கூட்டணி குறித்த முடிவை கேட்ட நிருபரின் பெயரைச்சொல்லி கூறினார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபரைப்பார்த்து, ‘’நீயே ஏன் கேக்குற? வேற யாராவது கேளூங்க?’’என்றார்.
நீ, வா, போ, என்று பிரேமலதா ஒருமையில் பேசியதற்கு நிருபர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதும், வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், தொடர்ந்து, ‘’நீங்க பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருப்பீங்க. நாங்க சொல்லிக்கிட்டே இருக்கணுமா’’ என்று அதட்டலாக கூறினார்.