நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று (12.02.2024) மாலை 03.00 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் வி.சி.கவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்பப் பட்டியலாக வி.சி.க. அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட விரும்புகின்ற தொகுதிகளை பட்டியலிட்டு தி.மு.க.வினரிடம் வழங்கி உள்ளோம். அதில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய கூட்டணியாக தி.மு.க. கூட்டணி விளங்கி வருகிறது. இது இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.