கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை பேசுகையில், “அதிமுக தொண்டர்களின் உணர்வை மதிக்கும் தீர்ப்பு வந்துள்ளது. கழகத்தினுடைய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தோம். அந்த பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை தந்திருப்பது ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். பல கட்டங்களில் நான் பேசும்போதெல்லாம் கூட்டுத் தலைமை என்பது ஒத்து வராது என்று ஜெயலலிதா எப்போது மறைந்தார்களோ அன்று முதல் பேசி வருகிறேன். ஆட்சியும் கட்சியும் ஒரு தலைமையில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. அன்று என்ன சொன்னேனோ அதையே இன்றும் சொல்கிறேன்.
கட்சியும் தலைமையும் ஒரு இடத்தில் இருந்தால்தான் ஜனநாயக முறையில் கட்சி செயல்படும் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தானது இன்று மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. இடைக்காலத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு அதனால் தொண்டர்களுக்கு இடையே பல குழப்பங்கள் தான் ஏற்பட்டது'' என்றார்.