பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர், குணமடைந்து வீடு திரும்பும்போது, அ.தி.மு.க. தலைமையில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஓ.பி.எஸ்.க்கு வாய்ப்பு கிடைக்கும் என விவாதம் நடந்துவருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவியை சசிகலா கேட்டவுடனே, ராஜனாமா செய்தவர் ஓ.பி.எஸ். அதன் பிறகு பல பிரச்சனைகளில் சசிகலாவை பற்றி பேசியிருந்தாலும், சசிகலா மீண்டும் ஓ.பி.எஸ்.-ஐ வைத்தே, அ.தி.மு.க.வில் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக சசிகலாவின் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தத் தகவல் முதல்வர் எடப்பாடியின் காதுக்கு எட்டியுள்ள நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா, ஜெயலலிதாவின் ஆள் உயர சிலை என தனது பெயரில் திறந்து வைத்துள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்தச் சூழ்நிலையில்தான், துணை முதல்வரான ஓ.பி.எஸ்.-ன் இளைய மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் பெங்களூருவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா, பூரண குணமடைந்து, வரவேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்தத் தகவலை அறிந்த ஓ.பி.எஸ். தன் மகனிடம் இதுபோன்று எந்த தகவலையும் பரிமாறக் கூடாது எனக் கண்டித்துள்ளாராம். இந்த விஷயம் எடப்பாடியை டென்ஷனாக்கியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இதுகுறித்து எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ். இளைய மகனின் இந்தப் பதிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.