சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனைக்குள்ளாகி, நான்கு வருடச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லை சுப்பிரமணிய ராஜா, சுவரொட்டி அடித்தது பரப்பரப்பை உண்டாக்கியது. பரபரப்பு அடங்கும் முன்னரே, 'கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டார்' என சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.
இந்நிலையில், "எத்தனையோ அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். கட்சியும் எங்கள் பக்கம் வரும். சசிகலா கர்நாடகாவை விட்டு தமிழ்நாட்டிற்கு வரும் நாளில், அதனை எதிர்பார்க்கலாம்" என அடுத்த பரபரப்பினை உருவாக்கியுள்ளார் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா.
அ.தி.மு.க. கட்சியின் சார்பு அணிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். மன்றத்தின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தவர் சுப்பிரமணிய ராஜா. கடந்த 1989ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பணியாற்றி வரும் இவர், சொத்துக்குவிப்பு வழக்கு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படங்களுடன் சசிகலாவின் படத்தினை பெரிதாகப்போட்டு, "அ.தி.மு.க.வை வழிநடத்த வருகை தரும் 'பொதுச் செயலாளர்' அவர்களே வருக.! வருக.!" என்கின்ற வாசகங்களுடன் சுவரொட்டியை நெல்லை சந்திப்பு பகுதி தொடங்கி மாநகரெங்கும் ஒட்டி அமர்க்களப் படுத்தினார். இது கட்சியின் தலைமைக்கு எரிச்சலூட்டிய நிலையில் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நெல்லை சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது கட்சித்தலைமை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜா, "சசிகலா விடுதலைக்காக வால் போஸ்டர் ஒட்டியதாக கட்சியில் இருந்து என்னை நீக்கியதாகக் கேள்விப்பட்டேன். அப்படி என்றால் ஏற்கனவே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கழக நிர்வாகி கோகுல இந்திரா ஆகியோர் இதற்கு முன்பு சசிகலாவிற்கு ஆதரவாகப் பேசி உள்ளார்கள். அவர்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் சசிகலா பக்கம் தான் இருக்கிறார்கள். சசிகலா கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும்போது இங்கு உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அவர் பின்னால் செல்வார்கள். சசிகலா மட்டும்தான் இந்தக் கட்சியையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் மீண்டும் கொண்டுவர முடியும். அவர்தான் அ.தி.மு.க.வின் அடையாளம். அவரை உதாசீனப்படுத்தினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் 75 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்" என்றார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த காலகட்டத்தில், இன்றைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அடுத்த முதல்வராகத் தகுதியுடையவர் சசிகலாவே.! இதனை வலியுறுத்தி 1008 பால்குடம் எடுத்து ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்துவோம்" எனத் தமிழ்நாட்டில் சசிகலாவிற்காக முதன்முதலாக வீர முழக்கமிட்டது இதே நெல்லையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: விவேக்