பாஜக வடமாநிலங்களில் ஆட்சியை எப்படிப் பிடித்தது என்பது தெரியும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என அதிமுக இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, இபிஎஸ் - ஓபிஎஸ் என இருவரையும் தனித்தனியே சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் சமாதானப்படுத்துவதற்கான முயற்சி என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு அதிமுக இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிமுக இபிஎஸ் தரப்பினைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை சட்ட ரீதியாக அவர்களுக்கு கடமைகள் உண்டு. அரசியல் கட்சிகளின் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான். அதன் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு அந்த கட்சிகளின் விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. கடமையை செய்ய தவறிவிட்டு இப்பொழுது நீதிமன்றத்தை கைகாட்டுவது சட்டத்தை மீறிய செயல்.
பாஜக, இபிஎஸ் - ஓபிஎஸ் என இருவரையும் இன்று சந்தித்துள்ளது. பாஜக வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அதிமுக கூட்டணி முறிந்ததா என கேட்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் கூட பாஜக தனியாகத்தான் போட்டியிட்டது. எனவே இந்த கேள்விக்கு பொருளில்லை. பாஜக உடனான கூட்டணி அதிமுகவிற்கு ஆபத்தாக இருக்கிறதா என கேட்கின்றனர். மக்கள் எங்களுடன் இருக்கும் காரணத்தால் பாஜகவும் எங்களுடன் இருக்கலாம். எங்களுடன் பணியாற்றலாம். காத்திருந்து பாருங்கள். திமுக அல்லாது யாருடன் வேண்டுமானால் அதிமுக கூட்டணி வைக்கும். பாஜக இருவரையும் சமாதானப்படுத்த முயலவில்லை” எனக் கூறினார்.