ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, அறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி. அதன்பின் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் எடுத்த முடிவுக்குப் பிறகு அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி ஒன்றைத் துவங்கினார்.
'இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்தி, கட்சி தொடக்க விழாவில், “எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக தரப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும். அதேபோல் நான்கு துணை முதல்வர் பதவி கொண்டுவரப்படும்'' எனவும் கூறியிருந்தார்.
தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் தேர்தலில் தன்னுடைய 'இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' தேர்தலில் போட்டியிடாது என அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தக் குறுகிய காலத்தில் களப்பணி ஆற்ற முடியாது. அதேபோல் கட்சிக்கான ரோபோ சின்னம் பெறுவதில் தாமாதம் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.