Skip to main content

இன்று தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியுள்ளனர். அதேபோல், மற்றொருபுறம் தமிழகம், அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

 

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (25/02/2021) தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் உம்மன்சாண்டி, சுர்ஜே வாலா, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

 

முன்னதாக, நேற்று (24/02/2021) காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பிரச்சாரக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமசாமி, விஜயதாரணி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், தி.மு.க.விடம் இருந்து எத்தனை சட்டமன்றத் தொகுதிகளைப் பெறுவது, தேர்தல் பிரச்சாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்