பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா மௌனமாகவே இருந்தார். இனி அவர் அதிமுக பக்கம் வரமாட்டார், அவர் வேறு அதிமுக வேறு என்று முடிவாகிவிட்டது என அதிமுகவின் இ.பி.எஸ். தரப்பினர் பேசிவந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மௌனத்தை கலைத்தார் சசிகலா. “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்க பாடுபட வேண்டும்” என பேசினார் சசிகலா. அந்த பேச்சு முடிந்ததிற்குப் பிறகு சசிகலா சந்தித்த முதல் நபர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். அதன்பிறகு, திரை உலகை சேர்ந்த பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
சசிகலாவை சந்தித்த அனைவரும், “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு” எனத் தெரிவித்தனர். ஆனால், இதில் ஒரு அரசியல் பின்னணியும் எதிரொலியும் இருக்கு என்றும் கருதப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என சரத்குமாரும், சரத்குமார் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார் என ஜெயக்குமாரும் சொல்லிவந்தனர். இந்தநிலையில் திடீரென நேற்று ச.ம.க.வும் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.வும் கூட்டணி அமைத்தனர். மேலும், இன்று காலை கமலையும் சந்தித்தனர். இதன் பின்னணியில், சசிகலா இருக்கிறாரா எனக் கருத தோன்றும் வகையில் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக கூட்டணியிலிருந்த ஒருவரை உடைத்து சசிகலா, திசைதிருப்பி ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகுத்திருக்கிறாரா என அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள்.
சசிகலாவின் முதல் ஆட்டத்திலேயே அதிமுக கூட்டணியிலிருந்த சரத்குமார் அவுட் ஆகிவிட்டார். அடுத்தடுத்த அவுட்கள் தயாராகவே இருக்கின்றன. அது தனியரசாகவும் இருக்கலாம், கருணாஸாகவும் இருக்கலாம். காரணம் தனியரசு சசிகலாவை ஏற்கனவே சந்தித்துவிட்டார். கருணாஸ் பல இடங்களில் சசிகலாவை முன்னிலைப்படுத்திப் பேசிவருகிறார். அதனால் அடுத்தடுத்த அவுட்டகள் அவர்களாகவும் இருக்கலாம்.
அதிமுக கூட்டணியிலிருந்து ஒருவரை முதலில் உடைத்து இழுத்துவந்தது சசிகலாதான். இது எடப்பாடிக்கு முதல் அதிர்ச்சி, அடுத்தடுத்த அதிர்ச்சிகளை சசிகலா தர தயாராகவே இருக்கிறார். அடுத்து என்ன அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை என அதிமுக மேலிடம் பேசுகிறது. ஏனென்றால், இதே அதிமுக கூட்டணியில் இருக்கும் தனியரசும் சசிகலாவை சந்தித்திருக்கிறார். இதனால், அவரும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம், கருணாஸும் விலகலாம், ஏற்கனவே தமீமுன் அன்சாரி அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர்கள் இருவரும் விரைவில் எடப்பாடிக்கு டாடா காட்டிவிட்டு சசிகலா சொல்வதைக் கேட்பார்கள் எனக் கூறப்படுகிறது.