
இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 2023 - 2024 நிதியாண்டிற்கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை வரும் 20 ஆம் தேதியும் வேளாண் அறிக்கை 21 ஆம் தேதியும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பும் இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனால் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபோன்ற பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை குறித்தான சட்ட மசோதாவை கடந்த ஆண்டு 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.