அரியலூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.ஆர். கார்த்திக்கின் சகோதரர் வினோத், இங்கிலாந்து - ஸ்காட்லேண்டில், கடந்த 23.05.2020 அன்று மாரடைப்பால் காலமானார்.
அவரது உடலை தமிழகம் எடுத்து வருவதற்கு உதவக்கோரி, அவரது குடும்பத்தினர் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டனர்.
உடனடியாக, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர் ஆகியோரை கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, வினோத் உடல் அங்குள்ள அவரது மனைவி, மகள் உடனே இந்தியா வருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுக்கொண்டார்.
உடன், லண்டன் தூதரகத்திலிருந்து 'கரோனா ஊரடங்கு காரணமாக, விமான சேவை இல்லை, எங்கள் தளத்தில் பதிவு செய்யுங்கள், விமானம் இயங்கும்போது முன்னுரிமை தருகிறோம்' என்று
பதில் வந்துள்ளது. உடனே, தமிழச்சி தங்கபாண்டியன், “இதுபோன்ற பொதுவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.இறந்தவரின் உடலை தமிழகம் கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். விமானங்கள் இயங்கவில்லை என எனக்கு நன்றாகத் தெரியும். இறந்தவர் உடல், அவரது மனைவி, மகளை தமிழகம் என்றில்லை, இந்தியாவில் எந்த விமான நிலையத்திற்கு விமானம் இயக்கப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வையுங்கள்” என அழுத்தம் கொடுத்தார்.
தொடர்ச்சியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரியிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கொடுத்த கோரிக்கைகள், தொலைபேசி வழி நினைவூட்டல் காரணமாக, 16.06.2020 அன்று மதியம் 1.30 மணி அளவில் லண்டனில் இறந்த வினோத்தின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் பொதுத்துறை சிறப்பு செயலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம், வினோத்தின் உடல் மற்றும் குடும்பத்தினர்கள் உடனடியாக, சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், உதயநத்தம் செல்வதற்கு உரிய அனுமதியினையும், தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுத் தந்திருந்தார். அதன்படி, அவரது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம், உதயநத்தத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இன்று (17.06.2020), அடக்கம் செய்யப்பட்டது.