தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர், தியாகராயநகர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது. சட்டமன்றத் தொகுதி காலியாக இருந்தால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில் அதாவது 2021ல் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடடம் இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், மூன்று தொகுதிகளில் தமிழகத்தில் காலியாக உள்ளன. இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருந்தாலும், கரோனா காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி தமிழக தேர்தல் ஆணையம் செயல்படும். தேர்தல் தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.