கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து இது குறித்த விசாரணையில் ஈடுபடுகின்றனர் என்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இது குறித்தான தகவல்களைப் பெறுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக காவல் துறையும் தமிழக முதல்வரும் இந்த விசாரணையைத் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்பாக மிகப் பெரிய குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட மாநகரம். ’98 குண்டுவெடிப்பிற்கு பிறகும் கூட இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் பல்வேறு தலைவர்களை நாங்கள் இந்த மண்ணில் பலி கொடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான செயல்கள் நடந்த இந்த மண்ணை முதல்வர் வந்து பார்க்காதது கூட மட்டுமல்ல, இதைப் பற்றி பேசாதது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
எல்லாவற்றிற்கும் அறிக்கை கொடுக்கின்ற முதல்வர், தங்கள் அமைச்சர்கள் வாயிலாக பதிலளிக்கும் முதல்வர் இதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார். காவல்துறையின் புலனாய்வு நடவடிக்கைகள், செய்தியாளர்களின் சந்திப்புகள் எல்லாம் நடக்கின்றது. ஆனால், இம்மக்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். இம்மாதிரியான செயல்களை ஒருபோதும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இம்மாதிரியான தொடர்புடைய இயக்கங்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக பேசுகிறவர்கள் இன்னும் ஜெயிலில் இருந்து கொண்டு இம்மாதிரியான நடவடிக்கைகளை தூண்டிக்கொண்டு இருக்கிறவர்கள் அல்லது திட்டம் தீட்டும் நபர்களும் தமிழகத்தில் செயல்படுகிறார்கள் என்பது முதல்வருக்கு தெரியுமா என்பதும் தெரியவில்லை.
உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்து இருக்கிறது என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகிறது. 75 கிலோ வெடிமருந்து. அந்த சிசிடிவி காட்சிகளைப் பார்க்கின்ற போது மனது பதறுகிறது. தீபாவளி சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இம்மாதிரியான செயல் நடைபெறுகிறது. இது ஏதோ தனிப்பட்ட சம்பவம் கிடையாது.
தமிழக காவல்துறையும் தமிழக முதல்வரும் இந்த விசாரணையை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தொடர்புடைய நபர்களை ஏற்கனவே தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் இவர்களுடைய தொடர்புகள் இருந்து கொண்டிருக்கிறது என்பதை கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஒத்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தமிழக காவல்துறை மட்டுமே இதில் விசாரணை மேற்கொண்டு அதில் நிறைவான முடிவினை எட்ட முடியாது” எனக் கூறினார்.