இரு மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இமாலய வெற்றி பெற்றது. ஓரிரு தொகுதிகளை தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது அதே அளவு வித்தியாசத்தில் வேலூரிலும் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்திருந்த திமுகவுக்கு, 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பது மகிழ்ச்சியை தரவில்லை என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
இதுகுறித்து கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஸ்டாலின் விசாரித்தபோது, "விடுதலை சிறுத்தைகள் வாக்குகளும் இஸ்லாமியர்கள் வாக்குகளும் நாம் எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை' என்றிருக்கிறார்கள்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதை திமுகவினர் எப்படி பார்க்கிறார்கள்? என அறிவாலயத் தரப்பில் விசாரித்தபோது, "திமுக ஆதரவு தலித் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகளை அதிமுகவும் ஏ.சி.எஸ்.சும் பர்ச்சேஸ் செய்து விட்டனர். தலித்துகளும் முஸ்லீம்களும் திமுகவை விட்டு வேறு எங்கும் போகமாட்டார்கள் என அலட்சியமாக இருந்தது திமுக. அதனால், அந்த ஏரியாவில் தங்களது பர்ச்சேஸ் சாமார்த்தியத்தை காட்டியது அதிமுக. இதுதான் வாக்குவித்தியாசத்தில் திமுக கோட்டைவிட்டதற்கான காரணம்" என்கிறார்கள்.