சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நகைச்சுவைத் திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். விழாவில் தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று குறித்தும் அப்போது கிடைத்த அனுபவங்கள் குறித்தும் நாசர் கூறினார்.
அப்போது பேசிய அவர், “கொரோனா பேரிடர் காலத்தில் நம்மிடம் இருந்து நமது மனைவி, தாய், தகப்பன் என எல்லோரும் இடைவெளியை கடைப்பிடித்தார்கள். செய்தித்தாள்கள் வந்தால் கூட கைகளில் உறைகளை போட்டுக்கொண்டு அதை அயர்ன் செய்து அதன் பின் தான் படிப்பேன். அப்படி இருந்தும் கொரோனா வந்து விட்டது. மருத்துவமனைக்குச் செல்லும்போது மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என நினைத்தால் அவர் தொலை தூரத்தில் இருந்து கொண்டு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் போய்வாருங்கள் என்கிறார். அது போலவே என் மகனும் கூறுகிறார். மருத்துவமனைக்குச் சென்று 17 நாள் தனிமையில் இருந்தேன்.
மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படாத ஆரம்பக்கட்ட நிலை. திடீரென ஒரு நாள் ஒரு போன் வந்தது. எதிர்முனையில் அழுகுரல். நான் கூட கொரோனா காலத்தில் தேவையான பொருட்கள் கிடைக்காததால் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி அழைப்பு வந்திருக்கும் என நினைத்து யார் எனக் கேட்கிறேன். என் மனைவி அழைத்திருக்கிறார். நான் சொல்கிறேன். எனக்குச் சரியாகி விட்டது. 5 நாட்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர் சொல்லி இருக்கிறார் எனச் சொல்கிறேன். அவர், நான் அதற்கு அழவில்லை. எனக்கும் கொரோனா வந்துவிட்டது” எனச் சொல்கிறார்.
அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. இறைவன் மிகப்பெரியவன். வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார். நான் அடித்த மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாயின்மெண்ட் அலுவலகத்திற்கு கேட்டுள்ளது” எனக் கூறுவார். இதை அவரிடம் சொன்னேன். நான் இருந்த மருத்துவமனையில் என் அருகிலேயே ஒரு அறையை ஒதுக்கி சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம்” என்றார்.