இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதியில் ஒன்றாக தூத்துக்குடி இருக்கிறது . இந்த தொகுதியில் கலைஞர் அவர்களின் மகளும் , இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராகவும் உள்ள கனிமொழி போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து அதிமுக , பாஜக கூட்டணி சார்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் போட்டியிடுகிறார் . கனிமொழியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது கனிமொழி எல்லாவற்றையும் தாண்டி சமூக போராளியாக வளர்ந்திருக்கிறார். 'பார்லிமெண்ட் டைகர்' என்ற பட்டத்தை கனிமொழி பெற்றிருக்கிறார். தூத்துக்குடிக்கும் ஒரு டைகராக கிடைத்திருக்கிறார். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பட்டத்தை பெற்றவர். 2007 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவர் கட்சிக்காகவும் சமூகத்துக்காகவும் நிறைய பணிகளை செய்துள்ளார் . அவர் ஆற்றியிருக்கும் பணிகளை எடுத்துச் சொல்ல நேரம் போதாது. மரண தண்டனை விலக்கு, நீட் தேர்வு பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, இந்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணார்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் கொடுமை, குலசேகரன்பட்டிணத்தில் 2-வது செயற்கைக்கோள் இயங்கு தளம் அமைத்தல், மகளிருக்கான இட ஒதுக்கீடு, கல்வி உரிமை மசோதா, பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, தற்கொலையைக் குற்றமாக்கக் கூடாது, சமூக நீதி உட்பட ஏராளமான பிரச்சினைகளுக்காக வாதாடி வெற்றி பெற்றவர் கனிமொழி. அதோடு இல்லாமல் தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவும் உள்ளார் . திமுக கழகத்தின் மகளிரணியை சிறப்பாக செயல்படுத்தி கலைஞரிடம் பாராட்டும் பெற்றவர் என்று கூறினார் .துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் தூத்துக்குடி மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறுபிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசினார்.