அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இக்கேள்விகளுக்கு திருமா பதில் அளித்தது சர்ச்சையாக்கப்பட்டது. திருமாவளவனின் நேர்காணல் குறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராசேந்திரன் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். சந்திப்பு முடிந்த பின் வைகோ மற்றும் திருமாவளவன் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “சட்டக் கல்லூரியில் மாணவராக இருந்த திருமாவளவன் என்னை பச்சையப்பன் கல்லூரியிலும் அதிலுள்ள விடுதிகளிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதற்கு என்னை அழைத்துக் கொண்டு போனார். அதைப் போல் திலீபன் மறைந்த பொழுது ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து என்னை பேச வைத்தார். அவர் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது ஒவ்வொரு கூட்டணியிலும் பேசிக்கொண்டு இருந்தேன்.
இடையில் ஒரு நேர்காணலின் போது ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் போன உடன் வருந்தத்தக்க விதத்தில் தேவையற்ற நியாமற்ற விமர்சனம் உலவ ஆரம்பித்தது. அவர் மிக வருத்தப்பட்டு அண்ணனைப் பற்றி நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னார். நான் ஒன்றும் வருத்தப்படவில்லை. உங்கள் மேல் எந்த வருத்தமும் இல்லை என அவரிடம் சொன்னேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “அந்த உரையாடலில் குறிப்பிட்ட இடத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால் தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. அதனால் வைகோ அதற்கு வருத்தப்படக்கூடாது என கேட்டுக் கொண்டும் என்றைக்கும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வைத்து போற்றுகிற நிலையில் நேரில் அவரைப் பார்க்க வேண்டும் இது குறித்து பேச வேண்டும் என்று விரும்பி அவரை இன்று சந்தித்தேன். தமிழகத்தின் பல்வேறு அரசியல் குறித்தும் எதிர்கால அரசியல் குறித்தும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் மனங்கலந்து பேசினோம். இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது” எனக் கூறினார்.