தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கி, மாலை 7 மணியளவில் முடிவடைந்தது. பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்தனர். இதில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பி.பி.இ. உடையை அணிந்துவந்த கரோனா நோயாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், தி.மு.க. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மரணம் குறித்து பேசியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குப் புகார் சென்றதையடுத்து, இன்று (07/04/2021) மாலை 05.00 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் @Udhaystalin க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆனால் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலைமீது நடவடிக்கை இல்லை. இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா? @TNelectionsCEO
— Jothimani (@jothims) April 7, 2021
.
இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், செந்தில் பாலாஜியை தரக்குறைவாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை இல்லை. இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பி.ஜே.பி.யின் பினாமி ஆணையமா?” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.