கோடை காலம் துவங்கி தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 109, 110 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம், பல மாவட்டங்களில் தன்னுடைய கோர முகத்தைக் காட்டி வருகிறது.
திருச்சியில் சுமார் 107 டிகிரி வரை வெப்பம் மக்களை சுட்டெரித்தாலும், இன்று (12.04.2021) விடியற்காலை முதல் பெய்து வரக்கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளுமையான நிலை ஏற்பட்டுள்ளது. அதைவிட தற்போது திருச்சி மாநகரில் ஆங்காங்கே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பந்தல்கள் அமைத்து வழங்கி வருகின்றனர்.
கட்சியினர் பொதுமக்களுக்கு மோர் கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது என்று மாஸ் காட்டுகின்றனர். அதிமுக, திமுக, அமமுக என்று கட்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர்ப்பந்தல் அமைத்து இந்தப் பணியை செய்து வருகின்றனர். வாக்குப்பதிவின் முன்தினம்வரை சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், வெயிலின் தாக்கத்தை உணர்ந்து தற்போது பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கும் பணியைச் செய்யத் துவங்கியுள்ளனர்.