Skip to main content

7 தமிழரை விடுவிக்க ஆளுனர் மறுப்பா? அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

 

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுனரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று  ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தெரிவித்து விட்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுனரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.

 

 nalini



இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுனருக்கு உண்டு என்றும், இந்த விஷயத்தில் அமைச்சரவை பரிந்துரையின்படி ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6&ஆம் தேதி ஆணையிட்டது. அதனடிப்படையில் செப்டம்பர் 9-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் சில முறை அரசின் சார்பில் ஆளுனருக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் இருப்பதாக ஆளுனர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று முதலமைச்சரிடம் ஆளுனர் கூறிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுனரும், முதலமைச்சரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.
 

7 தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும், திருப்பி அனுப்பவும் ஆளுனருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முதலமைச்சரிடம் ஆளுனர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்து விட்டார் என்றால், தமது அந்த முடிவை அதிகாரப்பூர்வமான முறையிலும் தமிழக அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமையாகும். மாறாக, ஒருபுறம் முதலமைச்சரிடம் தமது முடிவை தெரிவித்து விட்டு, மறுபுறம் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்களுக்கு,‘‘அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் உள்ளது’’  என ஆளுனர் மாளிகையிலிருந்து பதில் அனுப்புவது முறையல்ல. ஒரே விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு நிலைப்பாட்டையும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இன்னொரு நிலைப்பாட்டையும் ஆளுனர் மேற்கொள்வது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.


 

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற தமது முடிவை ஆளுனர் எழுத்து மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு தமிழர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியும். அவ்வாறு  அனுப்பினால் அதை ஏற்று 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆணையிடுவதை தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்கவே ஆளுனர் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது.
 

7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக  அரசு எழுதிய கடிதங்களை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், ‘‘ 7 தமிழர்களை விடுவிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்து விடும்; சர்வதேச அளவில் பல விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்று கூறியிருந்தது. அதனடிப்படையில் தமிழக ஆளுனர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியதாகவும் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுவும் அபத்தமான வாதமாகும்.


 

 

மத்திய உள்துறை அமைச்சகம் இதே வாதத்தை உச்சநீதிமன்றத்திலும் பதில் மனுவாக தாக்கல் செய்தது. ஆனால், அந்த வாதத்தை உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான அமர்வு ஏற்கவில்லை. அதனால் தான் 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்  உண்டு என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதால் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் ஆராய்ந்த பிறகு தான் அவர்களை விடுதலை செய்வதற்கு  தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி, 7 தமிழர்கள் விடுதலை என்பது சலுகை இல்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விட இரு மடங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில் தான் அவர்களின் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது இதுபோன்ற நிராகரிக்கப்பட்ட காரணங்களைக் கூறி, 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும்  7 தமிழர்களின் விடுதலையை ஆளுனர் மாளிகை தாமதிப்பது மனிதநேயமற்ற செயலாகவே அமையும்.
 

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுனரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுனர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்