Skip to main content

சொல் மட்டும் போதாது இ.பி.எஸ். அவர்களே... அ.தி.மு.க. அரசைக் கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

dmk

 


கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தற்போது நடத்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன், பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகளே கூறிவருகின்றனர். தேர்வு எழுதிதான் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என்பதில் தங்களக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மின்னல் வேகத்தில் கரோனா பரவும் நேரத்தில் எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தேர்வு எழுத நல்ல மனநிலை வேண்டாமா என அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியினர் பலரும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 


இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், பெற்றோர்-மாணவர்-ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு 10ஆம் வகுப்புத் தேர்வைக் ரத்து செய்யுங்கள். ‘நடத்தியே தீரவேண்டும்’ என்றால் கரோனா தீவிரம் குறைந்தபிறகு நடத்துங்கள். விடாப்பிடியாக நின்றால் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களைக் களத்தில் சந்திப்போம் என்றும், 'எதிர்க்கட்சி அஞ்சுகிறது’ என்றீர், ஆச்சர்யப்பட்டோம். ‘பணக்கார நோய்’ என்றீர், குழம்பினோம். ‘தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு’ என்றீர், இருந்தோம். ‘3 நாளில் காணாமல் போகும்’ என்றீர், காத்திருந்தோம். இன்றோ, கைவிரிப்பது போல் கண்ணீர்க் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? சொல்போதாது எடப்பாடி பழனிசாமி அவர்களே என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்