
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது முட்டுக்காடு ஊராட்சி. இங்குள்ள வேங்கைவயல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மனித கழிவு மிதந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டைத் தனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், வதந்தியைப் பரப்பி மனிதக் கழிவை கலந்ததாக வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, அதே ஊரைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளதோடு மேலும் பல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக சிபிசிஐடி சித்தரிக்கிறது என்று குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர்.
அதோடு நீதிமன்றத்திலும் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளதால் தலித் வன்கொடுமை சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணை மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.