
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி (09.02.2025) நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இன்று (19.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘செங்கோட்டையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா?’ எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “கட்சிக்காக செங்கோட்டையன் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைப்பவர். என்னை பொறுத்தவரையில் அதிமுக ஒன்றிணை வேண்டும் என ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் தொலைப்பேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். (நிருபரை நோக்கிச் சிரித்துக் கொண்டே எப்படியாவது சண்டையை இழுத்து விடனும் என்றார்).
அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இணைவதற்குத் தடையாக உள்ள சில ரகசியங்களைச் சொல்ல முடியாது. ஏற்கனவே சொன்னதைப் போல அதிமுகவிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள்... பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ரகசியம் என்று சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் எல்லாரும் அரசியல் கட்சிகளுமே நாங்கள் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக இயக்கம் பிளவுபட்டிருக்கிறது. இந்த இயக்கம் இணைய வேண்டியது தான் எங்களுடைய கோரிக்கை. உதயகுமார் பேசும் மொழி சரியில்லை. எனவே அவருக்குப் பதில் சொல்ல முடியாது. ஜெயகுமாருக்கும் பதில் சொல்ல முடியாது. என் மீது வசை பாடுபவர்கள் மிக நீண்ட காலம் வாழட்டும்... வாழட்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார். இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் போன்றவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.