நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''இங்கு கலந்து கொண்ட பல கல்வியாளர்கள் நிறைய கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். இந்த நீட் தேர்வு எப்படி வந்தது; அதனைப் பற்றிய புள்ளி விவரங்கள்; சட்ட சிக்கல்கள் என எல்லாவற்றையும் மிகத் தெளிவாக காலையிலிருந்து உங்களுக்கெல்லாம் விளக்கிக் கூறி விட்டார்கள். நீட்டைப் பற்றி மிக அதிகமாக நான் பேசி இருக்கிறேன். கடந்த நான்கு ஐந்து வருடங்களாக பேசி விட்டேன். இனியும் நான் பேசுவதற்கு தயாராகவும் இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் அமைச்சராக பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் நான் சட்டமன்ற உறுப்பினராகவும் பங்கேற்கவில்லை. நான் சாதாரண ஒரு மனிதனாக பங்கேற்கிறேன். புகைப்படங்களில் இருக்கக்கூடிய இந்த இறந்து போன 21 குழந்தைகளுடைய அண்ணனாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அத்தனை பேரும் காலை 9 மணி முதல் 5 மணி வரை இவ்வளவு உணர்வுபூர்வமாக இதில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு இடத்திலும் 8 ஆயிரத்தில் இருந்து 12000 க்கு மேல் நம்முடைய திமுக தொண்டர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், சாமானிய மக்கள் என நீட் தேர்வு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
நான் என்ன உணர்வோடு கலந்து கொண்டிருக்கிறேனோ அதே உணர்வோடு தான் நீங்களும் கலந்து கொண்டுள்ளீர்கள். அமைச்சர் பதவியில் இருந்து போராட்டம் நடத்தினால் பதவி இழப்பு நடக்கும் என சொல்லி உள்ளார்கள். ஒரு அதிமுக வழக்கறிஞர் கூட வழக்கு தொடுத்துள்ளார். இந்த அமைச்சர் பதவி இருந்தால் இருக்கட்டும் போனால் போகட்டும். நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன். திமுக பொறுப்பில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. எங்களுக்கு மாணவனுடைய கல்வி உரிமை முக்கியம். அதற்காக எந்த இழப்பு வந்தாலும் நான் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
அதிமுகவும் வாக்குறுதி கொடுத்தது. திமுகவும் வாக்குறுதி கொடுத்தோம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என. எனவே எடப்பாடி பழனிசாமி அவர்களே நான் உங்ககிட்ட கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இதில் அரசியல் செய்ய வேண்டாம். நானும் அரசியல் செய்யவில்லை. நீங்கள் கூட வர வேண்டாம் உங்களுடைய இளைஞரணி செயலாளரை அனுப்பி வையுங்கள். அல்லது மாணவர் அணி செயலாளரையாவது அனுப்பி வையுங்கள். நாங்களும் வருகிறோம் அனைத்து கட்சியும் நேர டெல்லிக்கு போவோம். பிரதமர் வீட்டுக்கு முன்னாடி போய் உட்கார்ந்து விடுவோம். அப்படி நீட் ரத்து செய்யப்பட்டால் அந்த முழு பெருமையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்கிறேன். இதற்கு நீங்கள் தயாரா?. நீட் ரகசியத்தை உதயநிதி சொல்வாரா சொல்வாரா என்று கேட்கிறார்களே அந்த ரகசியத்தை இப்போது சொல்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள். காங்கிரசை, நமது கூட்டணி ஆட்சியை உட்கார வைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல் காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்துள்ளார்'' என்றார்.