விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆன் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.
திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவை குறை கூறுகிறது. ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன். விக்ரவாண்டி இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால் தான் அதிமுக போட்டியிடவில்லை.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். 1992 இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது 2000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 2300 வாக்குகள் வரை அதிமுக போட்டது. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்துகளில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுகவினர் போட்டனர். இந்த இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான். இந்தத் தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூற முடியுமா?.
எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வாக்களிக்க மாட்டார்களா?. வன்னிய சமுதாய மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் கலைஞர். எனவே வன்னியர் மக்களே கலைஞர் செய்த நன்மையே திமுகவிற்கு வெற்றியைத் தேடித் தரும்”எனத் தெரிவித்தார். இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.