ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “நான் உட்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். நானே கூட இடைத்தேர்தலில் போட்டியிடலாம். அனைவரும் எதிர்பார்ப்பதுபோல் வரும் 27 ஆம் தேதி ஒரு மகிழ்ச்சியான முடிவை அறிவிப்போம். அதிமுக என்ன நிலைமையில் இருக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதவி வெறி பிடித்து, சுயநலத்துடன் அலைகின்றனர். அதனால் இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. எப்போதுமே இருமுனை போட்டியாக இருந்த நிலையில், பெரிய தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கலைஞர் இருவரும் இல்லாததால் தற்போது பலமுனை போட்டிகள் நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.