ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்தான அறிக்கையை காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று அளிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தானின் தற்போதைய முதலமைச்சர் அஷோக் கெலாட் போட்டியிடுகிறார். இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் அஷோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் ராஜஸ்தானின் சூழ்நிலையை ஆய்வு செய்ய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஆய்வு செய்து தயார் செய்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் சமர்ப்பிக்க உள்ளனர்.
ராஜஸ்தானின் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டு அஷோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்க சச்சின் பைலட் நெருக்கடி கொடுத்ததால் அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாமல் அவர்கள் தனியே ஒரு கூட்டத்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அளித்த அறிக்கையில் கலந்து கொள்ளாத எம்,எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கையில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் காங்கிரஸ் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி தேதியான செப்.30 வரை எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.