
தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு, அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படாதது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் 21,672 வழக்குகள் போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்த நிலையில், அவற்றில் 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 30% வழக்குகளில் அதாவது 6110 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 12 ஆயிரத்து 170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஓராண்டுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும் தான். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் 100-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளனவோ, அங்கெல்லாம் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்; 300-க்கும் கூடுதலான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை 20 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவையான நீதிமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான். தென்காசி மாவட்டத்தில் புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை அங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திற்கான போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்காண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்குத் தான் அக்கறை காட்டுகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். அதன்பின் அந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அவ்வாறு குற்றவாளிகள் தப்பி விடுவதால் தான் குற்றவாளிகள் மத்தியில் அச்சம் குறைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் அக்கறை காட்டும் அழகு இது தானா?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.