Skip to main content

அரசு வெளியிட்ட அறிவிப்பும்; தேர்தல் ஆணையம் போட்ட தடையும்! - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

tn electricity minister senthil balaji explain electricity rate hike issue and election time 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு...

 

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களில் குறிப்பிடும் அளவில் விசைத்தறி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இவர்களுக்காக மின் கட்டண சலுகைக்கான அறிவிப்புகள் தேர்தல் விதிமுறையை மீறி அறிவிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. மின்சாரத்துறை அமைச்சராக இந்த தொகுதி விசைத்தறி தொழிலாளர் வாழ்வு முன்னேற நீங்கள் சொல்ல விரும்புவது? 

 

மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது விசைத்தறி தொழிலாளர்கள் சார்பில் தற்போது உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அதிகம் என்பதை குறிப்பிட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கடிதம் ஒன்றை கொடுத்தனர். விசைத்தறி தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட  கடிதங்களை ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக் கொள்ளாமல் மின் கட்டண உயர்வை அப்படியே உத்தரவாக வழங்கி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். விசைத்தறி தொழிலாளர்கள் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது, அந்த அளவிற்கு இன்றைய சூழல் இல்லை என்று வலியுறுத்தினார்கள்.

 

உடனடியாக முதலமைச்சர் அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். உடனடியாக விசைத்தறி தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எவ்வளவு மின் கட்டணம் குறைக்கப்படுகிறதோ அந்த தொகையை அரசு மானியமாக வழங்கும் என்று கூறிவிட்டு, உடனடியாக அதற்கான தொகையை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அதற்கான கணக்கீடுகள் செய்யப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்பட்டன. கோப்புகளை தயார் செய்யும் போது தேர்தல் வாக்குறுதியில் இலவசமாக 750 யூனிட் 1000 யூனிட் மின்சார மானியம் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோப்புகளை தயார் செய்து அனுப்புங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் இலவச மானிய மின்சாரம் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டதை நிறைவேற்றும் பொருட்டு, அதற்கான கோப்புகள் தயார் செய்து அனுப்பப்பட்டு உள்ளன. கட்டணம் உயர்த்தப்பட்ட ஒரு சில வாரங்களில் இந்த  கோப்புகள் தொடங்கப்பட்டதும், ஒவ்வொரு நிலையிலும் மின்சார வாரிய செயலாளர் கையெழுத்திட வேண்டும். கைத்தறி துறை செயலாளர் கையெழுத்திட வேண்டும். நிதித்துறை செயலாளர் கையெழுத்திட வேண்டும், நான் கையெழுத்திட வேண்டும். நிதி அமைச்சர் கையெழுத்திட வேண்டும், முதலமைச்சர் கையெழுத்திட வேண்டும். இதில் இவ்வளவு நிலைகள் இருக்கிறது.

 

முதலமைச்சரின் கையெழுத்துக்கு பிறகு அதற்கான பணிகளை முன்னெடுக்கும் போது தேர்தல் ஈரோடு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. எனவே இது ஈரோட்டுக்கு மட்டுமான செயல்பாடுகள் அல்ல. ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கான செயல்பாடுகள். இதனை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அரசின் மூலமாக கோரப்பட்டது. அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கடிதம் வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம் எங்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டார்கள். எந்த தேதியில் தொடங்கப்பட்டது, எந்தெந்த தேதிகளில் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததால் தேர்தல் முடிந்த பிறகு இந்த அரசாணை நிறைவேற்றப்படும். 

 

 

 

சார்ந்த செய்திகள்