தமிழத்தில் நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. இதையடுத்து அமமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா, பேரவை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.சின்னதுரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன் என்ற மூர்த்தி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், பாளையங்கோட்டை பகுதி செலாளர் ஏ.அசன்ஜாபர்அலி, புளியங்குடி நகர செயலாளர் எம்.சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் எஸ்.டி.சங்கரசுப்ரமணியன், செங்கோட்டை நகர செயலாளர்கள் யு.முத்தையா, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் ருசேவ், புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா பாலசுப்ரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.மாரியப்பன், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் எஸ்.சின்னபாண்டி, சங்கரன்கோவில் நகர பேரவை செயலாளர் கே.சேகர், சாம்பவார் வடகரை பேரூராட்சி செயலாளர் ஜி.காமராஜ் ஆகியோர் அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்பி, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுக மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் கே.ராஜாராம், ஒன்றிய செயலாளர் வி.அப்பாதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுக தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பூக்கடை எம்.முனுசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஆர்.அசோக்குமார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக தர்மபுரி மாவட்ட செயலாளரும் உயர் கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.