தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கான சட்டமன்றத் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள்.
அந்த வகையில், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்திவந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேர்தல் உடன்பாடு தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. சார்பில் கூட்டாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிப் பங்கீட்டில் பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.