“நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்கும் மாணவர்களை, அரசியலுக்காக குழப்புவது நல்லதல்ல” என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்..
திருச்சியில், செய்தியாளர்களைச் சந்தித்த த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், “அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். கடந்த தேர்தலில், த.மா.கா. 6 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி தர்மத்தின்படி வெற்றிபெறுவதற்கான முயற்சி மேற்கொண்டோம். பல்வேறு காரணங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பின், கட்சிக்குப் புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக சுற்றுப்பயணம் செய்துவருகிறேன்.
மூப்பனார் காலத்திலிருந்து குடும்பமாகவும், கட்டுப்பாடான கட்சியாகவும் த.மா.கா. உள்ளது. த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சட்டச் சிக்கல் தொடர்கிறது. கடந்த தேர்தலில், 10 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தாலும், 6 தொகுதிகள்தான் கிடைத்தது. ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சட்டசபையில் உறுப்பினர் இல்லாத காலமும் இருக்கிறது. தேர்தல் இலக்கல்ல; லட்சியம்தான் இலக்கு.
வாய்ப்பு இல்லை என்பதற்காக, உயிரோட்டமான கட்சி அமைதியாக இருந்துவிட முடியாது. பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தால்தான் ஏமாற்றம் வரும். சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை. த.மா.காவும் அந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான வழி வகைகளைக் கையாள வேண்டும். கரோனா வைரஸ் 3வது அலை வந்தாலும், சமாளிப்பதற்கான கட்டமைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் கட்சி போன்ற அமைப்புகளில் பொறுப்பில் இருப்பவர்கள் விடுவித்துக்கொள்வது, அவரவர் தனிப்பட்ட முடிவு. பொறுப்பில் இருப்பவர்கள் விலகுவதை, இளைஞர்களுக்கு வழிவிடுவதாக கருதுகிறேன்.
மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நாகை, திருவாரூர் போன்ற கடைமடை பகுதி மாவட்டங்களுக்குச் சென்று சேரவில்லை. நெல்மணிகள் விதைப்பு செய்து, 20 நாட்களாகியும் முளைக்கவில்லை என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். தமிழக அரசு, கடைமடை பகுதிக்குத் தண்ணீர் சென்றடைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில், அப்பாவி மாணவர்களை, அரசியல் கட்சிகள் வஞ்சிக்கக் கூடாது. தேர்வு நடத்தினால், எழுதுவதற்குத் தயாராக இருக்கும் மாணவர்களையும், பெற்றோர்களையும் அரசியலுக்காக குழப்புவது நல்லதல்ல” என்று அவர் தெரிவித்தார்.