Skip to main content

‘லட்சக்கணக்கான இளைஞர்களின் தலையில் பேரிடி...” - இ.பி.எஸ். விமர்சனம்!

Published on 11/03/2025 | Edited on 11/03/2025

 

EPS says A disaster for millions of young people 

லட்சக்கணக்கான இளைஞர்களின் தலையில் பேரிடி விழுந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வருகிறார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வாக்குறுதி எண்.187இன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஒய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் நிலையில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு, மாதம் 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளர் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 21.03.2025க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் தவமிருக்கும் நிலையில், அவர்களின் தலையிலும், மற்றும் தற்போது பதவி உயர்விற்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களின் தலையிலும், திமுக அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்