சமக்கிய ஆந்திரா கட்சியின் தலைவர் நல்லாரி கிரண்குமார். இவர் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களும் ஒன்றாக இருந்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த நல்லாரி கிரண்குமார் ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட போது சமக்கிய ஆந்திரா என்ற கட்சியை தொடங்கி பொதுத்தேர்தலில் ஆந்திரா முழுவதும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து தனது பழைய கட்சியான காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், கிரண்குமார் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் பங்கெடுக்காமலேயே இருந்தார். ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போது கூட ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒற்றுமை யாத்திரையில் கிரண்குமார் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கிரண்குமார் பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் ஆந்திரா முழுவதும் தீயாய் பரவியது.
கடந்த மார்ச் துவக்கத்தில் கிரண்குமார் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அனுப்பி, அதில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும், ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் படியும் தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகினார். காங்கிரசில் இருந்து விலகுவதற்கு முன்னதாக பாஜக தலைவர்கள் அவரை சந்தித்ததாகவும், அவரை பாஜகவில் சேர கோரிக்கை வைத்ததாகவும் தகவல் பரவியது. காங்கிரஸில் இருந்து விலகிய கிரண்குமார், அமித்ஷாவின் ஹைதராபாத் வருகையின்போதோ அல்லது மார்ச் மாதத்தின் இடையில் டெல்லி சென்று பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் பாஜகவில் இணைந்த கிரண்குமார் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும் காங்கிரஸ் தலைமையை கடுமையாகச் சாடியுமுள்ளார். மக்கள் தீர்ப்பை ஏற்று தங்களை திருத்திக்கொள்ளும் திறன் காங்கிரஸ் மேலிடத்திற்கு இல்லை. தாங்கள் செய்வது மட்டுமே சரி என்றும், மற்றவர்கள் செய்வது தவறு என்றும் கருத்தை கொண்டுள்ளனர் என காங்கிரஸை கடுமையாகச் சாடியுள்ளார்.