
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா ஆகியோரது திருமணம் கடந்த 3ஆம் தேதி (03.03.2025) கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதிலும் குறிப்பாக இந்தத் திருமண நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் தலைவர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அப்போது பங்கேற்கவில்லை. இந்நிலையில் விஜய் விகாஸ் - தீக்ஷனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் இன்று (10.03.2025) நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். முன்னதாக இந்த திருமண வரவேற்பு விழாவின் போது எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்தார். அதாவது எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தருவதற்கு முன்பாகவே செங்கோட்டையன் மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதே சமயம் கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க சி.பி. ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கோவை வந்த நிலையில் அங்குச் சிறிது நேரம் சந்தித்து உரையாடினர். அதன் பின்னர் ஒரே விமானத்தில் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டனர். முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்குக் கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருந்தது.
மேலும் இருவருக்கும் இடையே முரண் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அதனை செங்கோட்டையன் மறுத்திருந்தார். அதோடு நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் செங்கோட்டையனிடம் எடப்பாடி மவுனம் காட்டி இருந்ததும் மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.