தஞ்சை மாவட்டம், சூலமங்கலம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜா (34). இவர் தனது 3 மாத கர்ப்பிணி மனைவி உஷா (34) உடன் நேற்றிரவு டூவீலரில் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவெறும்பூர் அருகே துவாக்குடி டோல்பிளாசா பகுதியில் வந்த போது அவர்களைப் போக்குவாரத்துப் பிரிவு ஆர்ஐ., காமராஜ் வழிமறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டூவீலரை ஓட்டிச் சென்ற ராஜாவை திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை கணேசா ரவுண்டானா வரை விரட்டிச் சென்ற ஆர்.ஐ. காமராஜ் டூவீலரை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த உஷா இறந்தார். இதனால் அப்பகுதியில் திரண்ட 3 ஆயிரம் பேர், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கைக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; தஞ்சை மாவட்டம் சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி உஷாவுடன் வந்த டூவீலரை துவாக்குடி போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் காமராஜ் துவாக்குடியிலிருந்து பெல் கணேசா வரை விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் உஷா இறந்தார். இதனைக் கேள்விப்பட்டதும் சொல்லொணாத் துயரமடைந்தேன். அவரது மறைவிற்கு அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போலீசாரின் அத்துமீறிய அராஜகத்தினால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோனது மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டது. போலீசாரால் உயிரிழந்த உஷா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரது துர்பாக்கிய துயரச் சம்பவம் நிகழ்ந்த இடம் எனது தொகுதி என்பதால் தகவல் கேள்விப்பட்ட உடனேயே இரவு 10 மணியளவில் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என். நேரு ஆகியோர் அறிவுறுத்தலின்படி சென்னையில் மாவட்ட கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மீட்டிங்கிலிருந்த திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிரீஸ் கல்யாண் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினேன். அவர்களும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
தொடர்ந்து காவல்துறை தலைவர் டிகே., ராஜேந்திரனை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவரிடம், தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா மனைவி உஷா இறப்பிற்குக் காரணமான துவாக்குடி போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் காமராஜ் மீது பாரபட்சமின்றி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். ஏற்கனவே, கடந்த வாரம் திருச்சி காஜாப்பேட்டையில் இதே போன்றே ஹெல்மெட் வழக்கில் திமுக., வட்டச் செயலாளர் மனைவி சரஸ்வதியின் உயிர் பறிபோனது. போலீசாரின் அத்துமீறலால் உயிர்களைப் பறிக்கும் இச்செயல் இனியும் தொடராத வகையில் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து காவல்துறையைக் கையில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போலீசாரின் அணுகு முறை அமைய வேண்டும், கர்ப்பிணிப் பெண் உஷா மற்றும் திருச்சி சரஸ்வதி போன்று போலீசாரால் உயிரிழப்பிற்குக் காரணமான சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கையைப் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" - இவ்வாறு எம்எல்ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.