ஆவின் பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக தலைவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் தலைமை தாங்கி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கவர்னர் டெல்லிக்கு போனால் நீங்கள் செய்த செயல்களை அங்கு எடுத்துச் சொல்லப் போவார். முதல் நாள் மழை பெய்ததும் காய்ந்து இருந்த பூமி ஆதலால் தண்ணீர் பிரண்டு செல்லவில்லை. இப்பொழுது சென்று பாருங்கள். இன்னும் ஒரு மழை பெய்தால் சென்னை மிதக்கும்.
கர்நாடகாவில் பெருமழை. காவிரியில் தடுப்பணைகள் கட்டாத காரணத்தால் இன்னும் ஒரு மாதத்தில் தண்ணீர் விவசாயத்திற்கு இருக்காது. ஆகவே, இந்த அரசாங்கம் எந்தத் துறையிலும் திட்டமிட்டுச் செயல்படவில்லை.
சீர்காழியில் நிவாரணமாக 1000 அறிவித்துள்ளார்கள். இது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம், காலையில் அதை ஊடகங்களில் பார்த்தபொழுதே மனதிற்கு மிகப் பெரிய வேதனையாக இருக்கிறது. 10 லட்சம் நிவாரணம் கொடுக்கின்றேன் எனச் சொன்னால் குழந்தையை எங்கிருந்து கொண்டு வருவது.
பேராவூரணியில் 860 கிலோ கிட்டத்தட்ட 1 டன், திண்டுக்கல்லில் 400 கிலோ பிடித்துள்ளார்கள். தமிழ்நாடு கஞ்சா நாடு எனப் பெயர் பெற்றிருக்கிறது. இது மிக மோசமான சூழ்நிலை. ஆகவே இந்த கஞ்சா நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் திமுக அரசை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்” எனக் கூறினார்.