
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சி மூலம் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை டெண்டர் வழங்கியதிலிருந்து காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளது. இது சிஏஜி அறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வர், ''அதிமுகவின் ஊழல் ஆட்சியைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியும் இருக்கிறது. இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டி உள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்தது கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சுதான் ஆகணும். அது உறுதி'' என தெரிவித்துள்ளார்.