தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதாக, அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. சார்பில் மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்! வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.